Courtesy : http://cvrintamil.blogspot.com/
கண் சிமிட்டும் கணிணி
கை அருகில் பாடல் கருவி
குழுமியிருக்கும் மின் அணு சாதனங்கள்
ஆனாலும் அறை முழுதும் வெறுமை
இதன் பெயர் தான் தனிமை
குளிர்சாதன பெட்டியில்
உணவு வகைகளின் பட்டியல்
சமைக்க செல்லாத மனது
சுவர் ஓரத்தை வெறித்திருக்கும்,இமைக்காத விழி அது
இதன் பெயர் தான் தனிமை
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்
மின் அரட்டை ஆரம்பிக்கலாம் நொடியில்
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்
இதன் பெயர் தான் தனிமை
தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
அயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை
- CVR