நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]