[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Sunday, July 22, 2007

ஆனந்தவிகடன் இதழுக்காக தாய் மொழி பற்றி பிரகாஷ்ராஜ்

வெறும் கம்யூனிகேஷன்தானே மொழி!'ன்னு இந்தத் தலைமுறை யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதைத் தாண்டி மொழியின் அருமை அவங் களுக்குப் புரியலை. என்னைப்பொறுத்த வரை மொழி என்பது என்னை வெளிப்படுத்துற வடிவம். என் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் வாகனம்.

நம் வாழ்விடத்தில் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் என்ன மொழியைப் பேசுறாங்களோ, அதை நாமும் சுத்த மாப் பேசுறதுதான் அந்த மக்களுக்குச் செய்கிற மரியாதை. 'நான் உன்னை மாதிரி இல்லை. வேற மாதிரி!'னு காட்டிக்கிறதுக்காகப் பேசுவது அநாகரிகம்.

சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. நூற்றுக்கணக்கான இளைஞர் களுடன் கலந்துரையாடுகிற வாய்ப்பு. எல்லோரும் படிச்சவங்க. கை நிறையச் சம்பாதிக்கிறவங்க. ஸ்டைலா ஆங்கிலம் பேசுறாங்க. சொந்த ஊர் எதுன்னு கேட்டா, 'அருப்புக்கோட்டைப் பக்கம் ஒரு கிராமம்'னு சொல்றார் ஒரு இளைஞர். 'அப்புறம் ஏன் தமிழில் பேச மாட்டேங்கிறீங்க?'ன்னு கேட்டா, 'இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சேன் சார்! தமிழ் சரியா வராது'ன்னு பதில் வருது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பேசினதுக்காக அபராதம் போட்டதா ஒரு செய்தி படிச்சதும், சிரிப்பும் வேத னையும் ஒரே நேரத்தில் வந்தது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனவன் தேவைக்கு ஏத்த மாதிரி எத்தனை மொழிகளை வேணும் னாலும் கத்துக்கலாம். ஆங்கிலத்தில் பேசறதும் எழுதுவதும் சந்தோஷமான விஷயம். ஆனா, ஆங்கிலம் தெரியலைங்கிறது இங்கே தமிழ்நாட்டில் ஏனோ ஒரு குற்றமாவே பாவிக்கப் படுது. 'ஐயோ! எனக்கு ஆங்கிலம் தெரியலையே'ன்னு ஒரு நாடே தாழ்வு மனப்பான்மையில் அலைவது அதிர்ச்சியா இருக்கு!

சரி, ஆங்கிலத்தில் பேசுறவங்க, அதை நல்லாப் பேசுறாங்களான்னு பார்த்தா, அதுவும் இல்லை. ஷேக்ஸ்பியர், மில்டன், கீட்ஸ்னு ஆங்கிலத்தின் எந்த அறிஞர்களைப் பற்றியும் பலருக்குத் தெரியலை. ஆங்கில மொழியின் அழகு, நளினம், இலக்கியம், பண்பாடு, சிந்தனைனு எதையும் தெரிஞ்சுக்காம, 'வியாபாரத்துக்குத்' தேவையான சில வார்த்தைகளை மட்டும் தெரிஞ்சுக் கிட்டா,ஆங்கிலம் தெரிஞ்சுட்டதா எப்படிச் சொல்ல முடியும்? மொழி என்பதை வெறும் வார்த்தைகளா மட்டுமே புரிஞ்சுக்கிட்டா, நமக்கு வாழவே தெரியலைன்னு அர்த்தம். அதனால் தான் நம்ம இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தில் அடங்கியிருக்கும் அழகும் தெரியலை; ஜார்ஜ் புஷ்ஷின் ஆங்கிலத்தில் ஒளிந்திருக்கும் குரூரமும் புரியலை!

மக்களோட வாழ்வை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடி, மொழி. ஆந்திராவில் வறட்சி அதிகமா இருக்கிற ராயலசீமா பகுதி மக்கள், 'பாவம்' பற்றி ஒரு பழமொழி சொல் வாங்க... 'நீ பண்ற பாவமெல்லாம் ஒரு நாள் மொத்தமா சேர்ந்து ஜீரணிக்கவே முடியாம, வயிறு வெடிச்சுச் சாகப்போறே பாரு!'ன்னு தப்பு செய்றவனை வன்முறையான வார்த்தை களால் கண்டிப்பாங்க. ஆனா, நல்ல விளைச்ச லுடன் செழிப்பான வாழ்க்கை வாழ்கிற கோதாவரி, கிருஷ்ணா நதிக் கரையோரத்து மக்கள், 'நீ செய்த பாவம் ஒரு நாள் பழுத்து நிச்சயமா கீழே விழும்!'னு தப்பு செய்யற வனையும் மென்மையாக் கண்டிப்பாங்க. அந்த வார்த்தைகளிலேயே அந்த மக்களின் வாழ்க்கையைப் பார்க்க முடியும். அதனால்தான் ஒரு மொழியைக் கத்துக்கிறது ஒரு பண்பாட்டையே கத்துக்கிற விஷயமாகுது.
பேந்ரே, பசவண்ணா, கே.எஸ்.நரசிங்கசாமி மாதிரி யான சிந்தனையாளர்களைத் தெரியாம, ஒருத்தர் கன்ன டம் கத்துக்கிட்டேன்னு சொல்ல முடியாது. ஆங்கிலப் பண்பாட்டைத் தங்களின் படைப்புகளில் சொன்ன சிந்தனையாளர்களைத் தெரிந்துகொள்ளாமல், வெறும் வியாபாரத்துக்காக ஒரு மொழியைக் கத்துக்க ஆரம்பிச்ச தால்தான், நம் அடையாளத்தைத் தொலைச்சுட்டு நிக்கிறோம். ஆங்கிலத்தை ஆயுதமாக்கி, 'உனக்கு ஆங்கிலம் தெரியலைன்னா, வாழ்க் கையே வீண்!'னு அப்பாவி மக்களை மிரட்டுறோம்
வெள்ளைக்காரங்க ஒரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த முக்கிய ஆயுதமாப் பயன்படுத்தியது, அவங்க மொழியை! மனிதன் எந்த மொழி பேசுறானோ, அந்த நாட்டுக்காரனா ஆகிடுவான் கிற உண்மையை அவங்க தெரிஞ்சுவெச்சிருக்காங்க. சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு கூட்டுக் குடும்பக் கலாசாரத்தில் அழகான உறவுப் பெயர்கள் தமிழ்மொழியில் இருக்கு. ஆனா, 'குடும்பக் கலாசாரம்' இல்லாத ஆங்கிலத்தைக் கேள்வி கேட்காம நம் வீட்டுக்குள் உலவவிட்டதால், இவங்க எல்லாரும் 'அங்கிள்', 'ஆன்ட்டி' ஆகிட்டாங்க. உறவுகளின் பெயர்களைத் தொலைப்பது, உறவு களையே தொலைக்கிற மாதிரிதானே!

இங்கிலாந்தில் பிறந்து வெயி லையே பார்க்காத குழந்தைகள், 'ரெயின் ரெயின் கோ அவே'ன்னு பாடுறாங்கன்னா, அதில் அர்த்தம் இருக்கு. ஆனா, கருவேல மரங்களும், காஞ்சு வெடிச்ச வானம் பார்த்த பூமியுமா இருக்கிற தமிழ்நாட்டுப் பிள்ளைகள் 'ரெயின் ரெயின் கோ அவே'ன்னு பாடலாமா? நமக்கு 'மழையே மழையே மீண்டும் வா!'தானே சரி!

வாழ்க்கையில் சில விஷயங்களை எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் மாத்த முடியாது. என் தாயை நான் மாத்திக்க முடியாது. நான் பிறந்த சாதிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த அசிங்கம் என் மேல் சுமத்தப்பட்டதுன்னு ஒதுங்கிடுவேன். என் மதம் பிடிக்க லைன்னாக்கூட வேறொரு மதம் மாறிக்க முடியும். ஆனா, யாரும் தன் தாய்மொழியை மாத்திக்க முடியாது. அப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி!

(சுட்டது)



--

மணிகண்டன்
--~--~---------~--~----~------
------~-------~--~----~
தமிழ் நண்பர்கள் Thamizh Friends

URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
If you are unable to read Tamil Fonts...
Please install http://tamil2friends.googlegroups.com/web/ekalappai20b_anjal.zip
-~----------~----~----~----~------~----~------~--~---








[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]