[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Sunday, July 22, 2007

ஈ-மெயில் என்பது ஈசன் கொடுத்த வரம்...

ஈ-மெயில் என்பது ஈசன் கொடுத்த வரம்...
http://tamil.webdunia.com/newsworld/it/usefullinks/0705/12/1070512011_1.htm

மின் அஞ்சல் பிறந்து முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. (எனக்குக் கூட கிட்டத்தட்ட அதே வயதுதான். ம். என்ன பிரயோசனம்?) மூன்று நான்கு வருடமாகத்தான் நாம் இன்று பயன்படுத்தும் மின்அஞ்சல் வசதிகள் பரவலாக கிடைக்கின்றன என்றாலும், ஒரு தொழில்நுட்பம் என்கிற வகையில் அது பிறந்தது 1971-இல்.

ரே டாம்லின்சன் (Ray Tomlinson) என்கிற அமெரிக்க விஞ்ஞானிதான் மின்அஞ்சலை அப்போது உருவாக்கினார். பி.பி.என். டெக்னாலஜீஸ் என்கிற நிறுவனத்தில் முதன்மை பொறியாளராக உள்ளஅவர் இப்போது மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் - மின்அஞ்சலின் தந்தை என்கிற ஸ்டார் ஜொலிப்புடன்.

செ.ச.செந்தில்நாதன்

ஒரே கம்ப்யூட்டரில் ஒருத்தர் இன்னொருத்தருக்கு அஞ்சல் அனுப்பும் வசதியுடன் அந்த மென்பொருள் முதலில் இயற்றப்பட்டது. பிறகு இன்டர்நெட்டின் முன்னோடி கம்ப்யூட்டர் வலைப்பின்னலான ஆர்ப்பாநெட் (ஹசுஞஹசூநுகூ) மூலம் அது செயல்படத் தொடங்கியது.

முதன்முதலில் அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் ஆபிரகாம் லிங்கனின் பேச்சு வாசகம் ஒன்று இடம்பெற்றதாகவும் அந்த வாசகம் முழுக்க காபிடல் லெட்டரில் இருந்ததாகவும் நினைவுகூறும் ரே, அதை யாருக்கு அனுப்பிவைத்தேன் என்பது நினைவில்லை என்கிறார். அவர் எழுதிய முதல் ஈ-மெயில் புரோகிராம் வெறும் 200 நிரல்வரிகளையே (கோர்ஸ்கோட்) கொண்டிருந்தது என்றால் இன்றைய புரோகிராம்கள் நம்ப மாட்டார்கள், சி++ரிப்பார்கள்.

மிக மோசமான சூழலிலும் நம்புவதற்குரிய தொடர்பு கருவியாக வாய்த்திருப்பது இப்போது மின்அஞ்சல்தான். அமெரிக்காவின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் உலகமே மின்அஞ்சலின் துணையை நாடியது.

பரபரப்பில்லாமல் வாழ்க்கையை ஓட்டிவரும் ரேவை பலரும் பாராட்டுவதில் வியப்பில்லை. அவருக்கு பாராட்டு மின்மடல்கள் பொழியப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர் ஆச்சரியப்படுவது, ஏண்டா ஈ-மெயிலைக் கண்டுபிடித்தாய் என்றும் சிலர் அவரைக் கேள்விக் கேட்பதுதான். அத்தகைய கேள்விகளும் ஈ-மெயில் மூலமே வருகின்றன என்பதுதான் வேடிக்கை.

ஈ-மெயில் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுக்கு மின்அஞ்சலைக் கண்டாலே ஆகாது. ஈ-மெயில் என்பது மனிதகுலத்தின் மீது சைத்தான்கள் திணித்துவிட்ட சாபக்கேடு என்பது போல அவன் வர்ணிப்பான்.

அவனது மிகப் பெரிய வருத்தம் இதுதான்; அவன் ஹாஸ்டலில் இருந்தபோது அவனது அம்மா அனுப்பிய கடிதங்களை அவன் அடிக்கடி பார்ப்பானாம். ஒடம்ப நல்லா பாத்துக்கப்பா என்கிற அக்கறை வரிகளுக்காக அல்ல, அம்மாவின் கையெழுத்து, அந்த லெட்டரின் மீது ஒட்டப்பட்ட வில்லையின் மீது குத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்பில் அழிந்து தெரியும் சொந்த ஊரின் பெயர், இவற்றின் மூலம் மனத்தில் எழுகிற ஒரு இனம் புரியாத பாசம், தொண்டைக்குள் அடைக்கும் நேசம், இதெல்லாம் அவனுக்குப் பிடிக்கும்.

எல்லாம் சரி, மின் அஞ்சலில் உள்ள ஐ. பி. அட்ரஸைப் பார்த்து இந்த உணர்வு வராது போலிருக்கிறது. சிக்னேச்சர் வரிகளும் சிநேகமானவை அல்லதான். ஆனால் அதற்காக எப்போதும் இந்தப் பாவி மின்அஞ்சலைத் திட்டிக் கொண்டே இருப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.

இன்னும் கொஞ்ச நாளில் கையெழுத்து ஃபான்ட் வரும். ஏன், வாய்ஸ் மெயில் வந்தாச்சே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன், முடியவில்லை. இந்த காலத்தில் மின்அஞ்சல் முகவரிகூட இல்லாத ஒரே மனிதப்பிறவி அவனாகத்தான் இருக்கும். ஈ-மெயில் போன்ற எந்த தொழில்நுட்ப மேம்பாட்டையும் திட்டிக்கொண்டே இருக்கும் அவனை இடித்துரைத்து ஒரு செய்யுள் இயற்றி இருக்கிறேன். தமிழ் அன்னையும் (அவங்களோட ஈ-மெயில் ஐ.டி. என்ன?), தமிழ் ஆசிரியரான என் அப்பாவும், வெப்உலகம் எடிட்டரும், மின்மடல் அறியா என் நண்பனும், எதற்கும் முன்காப்பாக சொல்லிவிடுகிறேன் - நீங்களும் - மன்னிப்பீர்கள் என்கிற பட்சத்தில் அந்தப் பாக்களை உங்கள் முன் படைக்கிறேன்.

எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக, அதிகம் ஆங்கில வார்த்தைகள் கலந்து மணியீநயசடவாகமாக இந்த செய்யுளை இயற்றி இருக்கிறேன். பரிசோதனை செய்யும் பொல்லாசை அதற்குக் காரணம். இதற்கும் மன்னித்தருள்க.

(யாப்பு - ஆசிரியர் வருத்தப்பா)

மஞ்சள்பொட்டு வைத்து மணவிழா அழைப்பிதழை
மங்கலமாய் அனுப்ப வழியற்ற இம்மின்
அஞ்சல்தொட்டு ஆவதென்கொல் எனக்கேட்டாய்.
அடச்சே! டெக்ஸ்ட் பாக்ஸ் பின்புலத்தை மஞ்சள் செய்!
நெஞ்சம் செல்வேகத்தில் மெயில் செல்லும், பெர்சனலாய்
நேருக்கு நேர் பேசல் நிகர்த்த செயல் அன்றோ - உலகக்
கஞ்சர்களின் தவத்தாலே கயிலை சிவன் அருளிய
கில்லர் ஆப் இதுவாம். செலவுக்கு ஸ்டாப் இதுவாம்.

போஸ்ட்மேன் வருகைக்காய் காத்திருந்து பூத்திருந்து
பெற்றக்கடிதத்தை பெருமகிழ்வில் பிரிப்பதும் எங்கோவோர்
ஹோஸ்ட் கம்ப்யூட்டர் இணைப்புள்ள ஹோம் பி.சி. இன்பாக்ஸில்
ஓப்பன் செய்வதுவும் ஒன்றா எனக் கேட்பவனே. ம்ஹூம்
வேஸ்ட் நீ! அட்டாச்மென்ட் அட்ரஸ்புக் அறியா அசடன் நீ.
விலைகேட்கா யாஹூ, ஹாட்மெயில் போல் சர்வீஸ் பல இருக்க
காஸ்ட்லி கடிதங்கள், கூரியர்கள் தேடுகிறாய். `கனி யிருப்ப
காய்கவர்ந்த' குறளுக்கு இலக்கணமோ உன் செய்கை?

செக்ஸ்சைட்கள் புண்ணியத்தால் ஜெகவலை பிரபலமாம்.
சாட் இல்லை என்றால் சைபர்கபேக்களில்லை. அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் ஏறிவரும் எமன்களாய் வைரஸ் தொல்லை -
என்பாய் நீ. எதில் இல்லை பேஜாரு? எக்ஸ்பீரியன் ஸிலாதவனே!
டெக்ஸ்ட் எடிட்டர் திணறுகிற வேகத்தில் சொற்களெல்லாம்
டெலிவரி யாகின்ற மாஜிக்கை உணராமல், புத்தம்புதிய ஈ
புக்ஸ் வந்த காலத்தில் சாணித்தாளில் படிக்கும்
புராதனன் அன்றோ நீ! பரம சிவனுக்கே வெளிச்சம்

சப்ஜெக்ட் லைனிலே தொடங்கிவிடும் சரசங்கள்
சாட்கள் முடிந்துவிடும் முகவரி பரிமாற்றத்தில்
ரிப்ளை செய்பவனின் ரிஷிமூலம் அறிந்திடவும்
ரீல்விடும் ஜொள்ளனின் நதிமூலம் அறிந்திடவும்
அப்ளிகேஷன்கள் உண்டு. அபாயம் ஒன்றுமில்லை -
ஆறுமுகனைப் பெற்றெடுத்த ஆதிசிவன் அருளாலே,
பப்ளிமாஸ் கொத்தவரை பாவையரின் தொடர்பெல்லாம்
ஈ-மெயிலை ஈன்றிட்ட ஈசனவன் வரத்தாலே.

ஸ்மைலிகளில், உணர்ச்சிகளைச் சித்திரமாய் வரைவதற்காய்
ஸ்பீடாக எதிர் வினையை தெளிவாக உரைப்பதற்காய்
அமைதியாய் உட்கார்ந்து அகிலத்தின் பிரச்னைமேல்
ஆழமாய் அகலமாய் வாதங்கள் புரிவதற்காய்
ஜமைக்காவின் ஜார்ஜும் ஜப்பானின் டோட்டோவும்
ஜாவா ஸ்கிரிப்ட் நடுவே ஜல்சாக்கள் செய்வதற்காய்
உமைபாகன் எம்பெருமான் சைபரமன் படைத்திட்ட
ஒப்பற்ற ஈ-மெயிலைத் திட்டாதே, தொலைச்சிடுவேன்.

(முற்றும்)






[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]